இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும்.
இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும். இத்திருக்கோயில் தேசிய நெடுஞ்சாலை 7ல் அமைந்துள்ள சாத்தூர் தாலுகாவிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இருக்கண்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி இத்திருக்கோயிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருக்கோயிலிலிருந்து 78 கி.மீ. தொலைவில் மதுரை சர்வதேச விமான நிலையம் மற்றும் 88 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையமும் அமைந்துள்ளன.
சுமார் 450 வருடங்கள் பழமையான வரலாறு கொண்ட இத்திருக்கோயில் மூலவராக அருள்மிகு மாரியம்மன் திகழ்கிறார். கருவறை அழகிய விமானத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன.
அருள்மிகு நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன. கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் ஸ்ரீ வடக்குவாய்ச்செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறையின் வடக்குப் பகுதியில் ஸ்ரீ பைரவர், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காத்தவராயர் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீ கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது. திருக்கோயிலுக்கு வெளிப்பகுதியில் கயிறுகுத்தம்மன் சன்னதி தென்திசையில் அமைந்துள்ளது. அன்னை மாரியம்மன் வலது காலை மடக்கி இடது கால் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் கோலம் மற்ற அம்மன் திருக்கோயில்களில் காண முடியாத சிறப்பான ஒன்றாகும்.
No comments:
Post a Comment